இறந்த எதிர் காலம்

புவிக்கு நாம்
செய்யக்கூடாத செயல்களை எல்லாம்
செய்து கொண்டே இருந்து விட்டால்
நம் எதிர் காலமும்
இறந்த காலமாய் —
நம்மைச் சுற்றியுள்ள
அனைத்தும் இறந்து போன
இருண்ட காலமாய் —
ஆகிடுமே
தெரியுமா நமக்கு?

கடலோடு…

களித்துப் போகிறாள் என் செல்லம்

தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும் அலைக் கரங்களால்
மகிழ்ந்து போகிறாள்

குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி சிலிர்த்து
கூவிக் கூவி வியந்து போகிறாள்

யார் குரல் பெரிதென
போட்டி போடுகிறாள்
அலை உயரம் இல்லாத என்
அல்லி மலர்ச் செண்டு

களைத்துப் போகிறது கடல்
அடங்கி, என் மகள் கால் தடவி
சென்று வா என அனுப்பி விடுகிறது

பிரிய மனமின்றி நடுங்கும் குளிரோடு
மீண்டும் என்று வருவோம் என
என் விரலைக் கேள்விக் கொக்கியால்
பிடித்துக் கொண்டே விலகி வருகிறாள்

அவள் விரலில் தான் நான்
மனம் முழுதும்
கடலே.

கோலங்கள்

புள்ளி வைத்துக் கோலம் போடுகிறாள்
பொதுவாகவே அப்படித்தான்

புள்ளிகளை இணைப்பதாய்
இருக்கும் கோலங்கள்
கொஞ்சம்தான்.

அழிந்து விடுகின்றன புள்ளிகள்
கோடுகளால் இணைத்தபின்

புள்ளியைச் சுற்றிச் சுற்றி இடும்
சிக்குக் கோலங்கள் தான் நாடகமே

என்னைச் சுற்றி
ஒரு சுற்றா
இரண்டா
நான் பாலமா
வெறும் வேடிக்கையா எனத்
தெரியாமல்
திக்கு முக்காடி விடுகின்றன
புள்ளிகள்.

அனைத்தையும்
முடித்துவிட்டு
நடு மையத்தின்
வெற்றிடத்தை
விரட்ட வைப்பாளே
ஒரு புள்ளி,
அங்கு தான் இருக்கிறது

என் சிறையும்.

மறதி மருந்து

சற்று அவசரமாகத் தான்
செல்ல வேண்டியிருந்தது
நேரமும் ஆகி விட்டது

வழியெங்கும் பச்சை விளக்குகளும்
கருணை காட்டவில்லை

வாகனமும் சற்று தள்ளியே
நிறுத்த வேண்டியிருந்தது
நடையும் நீளம் தான்
நான் அலுவலகம் நுழையும் முன்
எனக்கான வேலைகள் நுழைந்துவிட்டன

மதிய உணவு கூட சற்று உப்பு குறைவே
காபி கூட ஆறி விட்டது

கல்லொன்று கூட
என் விரலில்தான்
ரத்தச் சுவை கண்டது

தோங்கித் துலங்கி வீடு சேரும்முன்
மழையிலும் நனைந்து விட்டேன்
எல்லாம் போகட்டும்
நான் வீட்டில் நுழையும் போது
கொஞ்சமே கொஞ்சமாய் நீ
சிரித்து விடு!

எல்லாம் மறந்து போகும்.

வழுக்கல் வாழ்க்கை

விடை பார்க்கும் விளிம்பை நோக்கி
விசையின்றி உருளும் வினா நான்.
விடை கண்டு திரும்புவேனா
வீழ்ந்து சாவேனா
காலம் தான் சொல்லும்.

துளிர்ப்பு

மழை நீர் கண்ட
நிலத்தின் புல்லாய்
உனைக் கண்ட
என் மனக் காதல்

வானவில்

மழைக் குளியலின்பின்
வானம் அணியும்
புத்தாடை