கடலோடு…

களித்துப் போகிறாள் என் செல்லம்

தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும் அலைக் கரங்களால்
மகிழ்ந்து போகிறாள்

குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி சிலிர்த்து
கூவிக் கூவி வியந்து போகிறாள்

யார் குரல் பெரிதென
போட்டி போடுகிறாள்
அலை உயரம் இல்லாத என்
அல்லி மலர்ச் செண்டு

களைத்துப் போகிறது கடல்
அடங்கி, என் மகள் கால் தடவி
சென்று வா என அனுப்பி விடுகிறது

பிரிய மனமின்றி நடுங்கும் குளிரோடு
மீண்டும் என்று வருவோம் என
என் விரலைக் கேள்விக் கொக்கியால்
பிடித்துக் கொண்டே விலகி வருகிறாள்

அவள் விரலில் தான் நான்
மனம் முழுதும்
கடலே.

பற்றி mathilogesh
கவிதை எழுதுவதில் ஆர்வம் நிறையவே இருந்தாலும், எழுதும் அளவிற்கு திறன் இல்லை. இதுவரை ஒரு இருபது கவிதைகள் எழுதியிருப்பேன், அனைத்தும் கேவலம் - சுமார் ரகம். அதிருக்கட்டும், நான் ஒரு நல்ல ரசிகன்; நல்ல கவிதைகள், எளிமையான வார்த்தை ஜாலங்களை ரசிப்பேன்.

பின்னூட்டமொன்றை இடுக