அமெரிக்கப் பொங்கல்

நவம்பர் மாதம் நான்காவது வியாழன் ஆனாலே அமேரிக்கா எங்கும் ஒரே கொண்டாட்டம் தான். தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடக்க, இல்லங்களில் தான் கொண்டாட்டம் எல்லாம்…

நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving)  ஒரு நானூறு வருடங்களுக்கு முன்னாள் ஏதோ ஒரு காரணத்துக்காக (உள்ளூர்க் காரர்களின் விருநதோம்பலுக்குப் பயணிகள் நன்றி தெரிவித்தனர் என்று கேள்வி!) ஆரம்பிக்கப் பட்டாலும், இப்போது அது பல மாறுதலுக்கு உட்பட்டு இது ஒரு அமெரிக்கக் கலாசார விழாவாக ஆகியுள்ளது. இந்நாளில் குடும்பங்கள் ஒன்று கூடி அவரவர் எதற்காக நன்றிக் கடன் பட்டுள்ளனர் என்று தெரிவித்து, குடும்பத்துடன் அமர்ந்து சில சிறப்பான உணவு வகைகளை உண்டு நாளைக் கழிக்கின்றனர்.. வான்கோழி, பூசணிக்காயில் செய்த இனிப்பு, சிலவகை இனிப்பு ரொட்டிகள், என்று குடும்பத்திற்கு தகுந்த உணவுகளை சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.

போர்ட்டோ ரிகோ ஒரு அமெரிக்க காலனி ஆனதனால், இங்கும் நன்றி சொல்வதுண்டு. இந்த நாளில் முக்கியமான ஒரு உணவு டர்க்கி –  நம்மூரு வான் கோழி… குடும்பத்தில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைப் பொருத்து வித விதமான அளவில் அதைப் பிடித்து (கடையில் தான்)… கனல் அடுப்பில் வைத்துப் பொறித்து… குடும்பத்துடன் உண்பார்கள். இந்த நாளை வான் கோழி நாள் என்று கூட சொல்வதுண்டு! அமெரிக்க அதிபர் கூட இந்நாளினை முன்னிட்டு ஒரு வான்கோழியை மன்னித்து விடுவார் – இந்த ஒரு வான் கோழியைக் கொல்வதில்லை! அமெரிக்க, பொதுவாகவே மேற்கத்தியக் கலாச்சாரத்தில், கூட்டுக் குடும்பம் என்பது அவ்வளவாக இருப்பதில்லை. இதைப் போன்ற சில விடுமுறை நாட்களில் தான் அவர்கள் ஒன்று சேர்வதுண்டு… மகன்கள், மருமகள்/ன்கள், சகோதர சகோதரிகள், தாத்தா பாட்டிகள் என அனைவரும் ஒன்று கூடி வான்கோழியை ஒரு வழி பார்ப்பதுண்டு…  இந்த வாரத்தில் தொலைக்காட்சித் தொடர்களிலும் (sitcoms – one of my favorites is here) ஒரே நன்றி தெரிவித்தல் தொடரபான நிகழ்வுகள் தான்.

இந்த நாளில் வீட்டுக்குப் போக முடியாதோர் என்னுடைய விடுதியில் இன்றொரு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். வான்கோழியை சமைக்க ஏகப்பட்ட நேரம் ஆகுமானதால் கடையிலேயே வாங்கி வந்து விட்டனர் — நான் புளியோதரையும், தக்காளி சாதமமும் கொண்டு சென்றேன்… என்னடா வித விதமாக சமைத்து எடுத்துச் செல்லாமல் கட்டுச் சோறு செய்து கொண்டு சென்றானே என்று நீங்கள் என எண்ணலாம்… அதற்குக் காரணம் உண்டு: (1) இந்த வகைகள் எந்தக் கடையில் கிடைப்பதில்லை, ஏனெனில் இங்குள்ள இந்திய உணவகங்கள் பெரும்பாலும் வாடா நாட்டவரால் நடத்தப் படுபவை — தந்தூரி வகைகளும், பிரியாணி வகைகளும் ரோட்டி வகைகளும் தான் பிரதானம். (2) இவற்றைச் சமைப்பது மிகவும் சுலபம்.. (3) கொஞ்சம் புளிப்பும் காரமும் இருந்தாலே இவர்களை அசத்தி விடலாம்…

விருந்து எதிர்பார்த்தது போல் நன்றாகவே இருந்தது… பத்து பேருக்கு மேல் வருவார்கள் என்று எதிர் பார்த்தேன், என்னோடு சேர்த்து ஆறு பேர் தான்… ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் – ஒரு டச்சுக் காரன், கலிபோர்னியாவில் இருந்து வந்த ஒரு மெக்சிகோ பெண், நியு யார்க் பெண் ஒருத்தி, கொலம்பிய நாட்டுப் பெண் ஒருத்தி, அப்புறம் மார்ட்டினிக் எனும் கரிபியன் தீவில் இருந்து ஒரு பெண் என ஒரே கலவை தான்… டச்சுக் காரனுக்கு இதுதான் முதல் நன்றி தெரிவிக்கும் நாளாம் — இங்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. மார்ட்டினிக் பெண் இங்கே ஏழு வருடமாக இருப்பதனால் ஏற்கனவே பார்த்திருக்கிறாள் போல… நானும் இங்கு வந்து இத்தோடு ஐந்து வருடம் ஆயிற்றா, பல வகையில் பல இடங்களில் கிடைக்கும் பாக்கியம் கிடைத்தது — பொதுவாக நண்பர்கள் வீட்டிலோ அல்லது பணியிட நண்பர்களுடனோ கொண்டாடுவதுண்டு. இந்த முறை இங்கேயே…

இந்த முறை இதுதான் மெனு: வறுத்த வான் கோழியுடன், காராமணி போட்ட சோறு (arroz con gandules), பூசணிக்காய் பை (pumpkin pie – என்னால் மொழிபெயர்க்கவோ அல்லது இணையான நம்மூர் இனிப்பைக் கண்டறியவோ முடியவில்லை), பூண்டு தடவிய ரொட்டி, தக்காளி மற்றும் புளி சாதங்கள், அன்னாசிப் பழக்கூட்டு (மார்டினிக் பெண் செய்து கொண்டு வந்திருந்தாள்: மிகவும் சுலபம் — இலவங்கப் பட்டைத் தூள (cinnamon powder), எலுமிச்சை சாறு இவற்றை அன்னாசிப் பழத் துண்டுகளோடு கலந்தால் அன்னாசிப் பழக்கூட்டு (pineapple salad) தயார்), என்று சின்னதாக ஒரு மெனு.

அழகான ஒரு பிரார்த்தனையோடு நியு யார்க் பெண் விருந்தைத் துவக்கினாள்… “இங்கு நாம் பல்வேறு மதம் மற்றும் கலாசாரத்தில் இருந்து வந்திருப்பதால் பொதுவான ஒரு பிரார்த்தனையைக் கூறுகிறேன்… இன்று காலையில் நாம் உயிரோடு விழித்ததற்காகவும், பல இடங்களில் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாமல் பல கோடி பேர் இருக்கும் பொது நமக்கு இந்த அருமையான உணவு கிடைத்திருப்பதற்காகவும், குடும்பத்துடன் இல்லாவிடினும் அருமையான நண்பர்களுடன் இருக்க வாய்ப்பு கிடைததற்காகவும் நன்றி”.. அடுத்த ஒரு இரண்டு மணி நேரம் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே விருந்து நடந்து முடிந்தது… சாத வகைகளை விரும்பி உண்டனர்.

அவரவர் கலாச்சாரத்தில் இதற்கு இணையான ஏதாவது ஒரு விழா இருக்கிறதா என்று கேட்ட போது நான் நம்முடைய பொங்கல் திருநாளைக் குறித்து பகிர்ந்து கொண்டேன் – கதிரவனுக்கும் மாடு கன்றுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் அல்லவா…

ஒருவகையில் என்னுடைய பொங்கல் இரண்டு மாதம் முன்னரே வந்து விட்டது போல் ஒரு தோற்றம்… அனைவருக்கும் அமெரிக்கப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .